தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு .
அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க காவல்துறை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் .
சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைப்பு .

ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் .
அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பு கோரிக்கை . காவல்துறை தரப்பு கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க காவல் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 காவல் நிலையங்களிலும், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் தன்னை அழைத்துச் செல்வதால், 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், சில வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா என்பதை சரி பார்க்க வேண்டியுள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தார்.