கோரிக்கையை ஏற்கமறுத்த சபாநாயகரை கண்டித்து அதிமுக வெளிநடப்பு.தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க கோரி சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியபோது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முறையிட்டார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினார். இதேபோல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இருந்து 3 பேரை நீக்க கூறினோம், அதையும் சபாநாயகர் செய்யவில்லை என முறையிட்டார்.
சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் ஒன்றாக அமர வேண்டும் என்பது தான் மரபு என்பதை சுட்டிக்காட்டினார். ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதாகவும், உயர்நீதிமன்றமும் அவருடைய நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த பிறகும் சபாநாயகர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள், துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் என்பதை மறுக்கவில்லை என விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை என கூறினார். சட்டம், விதி என்ன சொல்கிறதோ அதன்படியே தான் நடப்பதாகவும், இருக்கை விவகாரம் வரும்போது வேண்டும் என்றோ, அதை தரக்கூடாது என்றோ நான் செய்யவில்லை எனத் தெரிவித்தார். மேலும், யாருக்கும் மனக்குறை வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த அவையை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அவரின் நிலைப்பாட்டிற்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், அவைக் காவலர்கள் மூலம் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதற்கு முன்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட முயன்றனர். தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர். பேரவை தலைவரே! பேரவை தலைவரே! ஜனநாயகத்தை காப்பாற்று என முழக்கமிட்டபடி அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
இன்றோடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடையும் நிலையில் அதிமுக வினர் போராட்டம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.