அதிமுக -பாமக கூட்டணி உறுதி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்!

2 Min Read
எடப்பாடி ராமதாஸ்

அதிமுக பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சனிக்கிழமை வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் 2ஆம் கட்டத்தில் தான் மக்களவை தேர்தல் வரும். ஆனால், இந்த முறை முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image
ராமதாஸ்

அதிமுகவைப் பொறுத்தவரை இப்போது தான் அவர்கள் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவாகத் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால் அதிமுக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக பாமக மற்றும் தேமுதிக உடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் திடீரென சந்தித்தார்., அவர்கள் கூட்டணி தொடர்பாகத் தனியாக ஆலோசனை செய்தனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி

இந்த மக்களவை தேர்தலில் அதிமுக- பாமக இடையே பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் பாமக கேட்கும் தொகுதிகளைத் தர அதிமுக ஒத்துக்கொன்றதாகவும் அதைத் தொடர்ந்தே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பாமகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிமுக உடன் கூட்டணி வைக்கவே தொடக்கம் முதல் விரும்பினார். இதன் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் 2 முறை ராமதாஸை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதியாகும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், ராமதாஸின் மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சி எடுத்துள்ளார். இதற்காக அவர் டெல்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி

இந்தச் சூழலில் தான் இன்று முதலில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் ராமதாஸை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார். இதன் மூலம் அதிமுக பாமக கூட்டணி இறுதியாகி உள்ளதைப் போலவே தெரிகிறது. கடந்த முறையைப் போலவே 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முறை கூட்டணியில் பாஜக இல்லாததால் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Share This Article
Leave a review