நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் டி. அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையானது மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக சார்பில் முரளி என்பவரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுரேஷ் ரத்தோட் என்பவரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் பாஜகவுக்கு எதிராக அதிமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிமுக மூன்று தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. பாஜகவிற்கு எதிராக வேட்பாளரை அதிமுக நிறுத்தி இருப்பது பாஜக கூட்டணியில் அதிமுக நீடிப்பதில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது.