திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசி கொண்டிருந்த போது மதுபோதையில் அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை அடித்து துவம்சம் செய்த அதிமுக கட்சி நிர்வாகிகளால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு துவக்க பொதுக்கூட்டம் திருப்பத்தூர் நகர பகுதிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது.
திருப்பத்தூர் அதிமுக கட்சியின் நகர செயலாளர் டிடி. குமார் தலைமையில் இந்த 52 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வந்தது.

நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு, முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி வீரமணி பேச தொடங்கினார் .அப்போது சிகேசி ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் , அதிக சத்தத்துடன் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற வழியாக சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் அதே வழியாக இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் கடந்துள்ளார். இவரது இந்த செயல் அதிமுக தொண்டர்களை முகம்சுளிக்க செய்தது , மேலும் அவர் மது போதையில் , கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த பகுதியை தொடர்ந்து வட்டமிட்டு வந்தாதால், ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவர்களில் சிலர் அந்த வாலிபரை கடுமையாக தாக்க ஆரம்பித்தனர் . இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பத்தூர் நகர போலீசார் ,அந்த வாலிபரை மீட்டு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த போதை ஆசாமி அதே பகுதியை சேர்ந்த கோடி என்பவற்றின் மகன் வெங்கடேஷ் (வயது 34 ) என்பதும் , மது போதை தலைகேறியாதல் செய்வது அறியாமல் அவரது வாகனத்தில் கூட்டம் நடைபெற்ற பகுதியில் வட்டமிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது .
மேலும் அந்த வாலிபர் மீது மது போதையில் வாகனம் ஓட்டி வந்தாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போலிசார் அந்த வாலிபரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் . அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வாலிபர் அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி கட்சி நிர்வாகிகளிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.