நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி..!

3 Min Read
ஆப்கானிஸ்தான் வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -
Ad imageAd image

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றும் முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த 34 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு எடுத்தது. நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி (1ரன்), ரகுமானின் சூழலில் எல்.பி.டபிள்யு ஆனார்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு நிலைத்து நின்று மட்டையை சுழற்றினார். ஆனால் துரதிஷ்டம் சொல்லி வைத்தார் போல் வரிசையாக ரன் அவுட்டில் சிக்கினார். மேக்ஸ் ஓ டாவுட் (42 ரன்), காலின் அகேர்மான் (29 ரன்), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (0) தேவையில்லாமல் ரன் அவுட்டில் நடையை கட்டினார்.

இதன் பின்னர் ஆப்கானிஸ்தானின் சூழல் ஜாலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விக்கெட்டுகள் வேகமாக சரிய இன்னொரு பக்கம் சைபிரான்ட் இங்கில் பிரிட் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். கடைசியில் அவரும் (58 ரன், 86 பந்து, 6 பவுண்டரி) ரன் அவுட் ஆனார்.

முடிவில் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற் பந்துவீச்சாளர்கள் முகமது நபி 3 விக்கெட்டும், நூறு அகமது 2 விக்கெட்டும் சாய்த்தனர். நெதர்லாந்தின் இன்னிங்ஸில் டாப் 5 வீரர்களின் 4 பேர் ரன் அவுட் ஆனது உலகக்கோப்பையில் இதுவே முதல் முறையாகும். ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் விக்ரம் அலிகில் மூன்று ரன் அவுட், இரண்டு கேட்ச், ஒரு ஸ்டெம்பிங் என்று கீப்பிங்கில் பிரமாதப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ரமனுல்லா குர்பாஸ் (10 ரன்), இப்ராஹிம் ஜட்ரன் (20 ரன்) வெளியேறினாலும் ரஹ்மத் ஷா (52 ரன், 54 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் அஸ்மதுல்லா ஷகிடி (56 ரன், 64 பந்து, 6 பவுண்டரி , நாட் அவுட்) அரை சதம் விளாசி வெற்றியை எளிதாக்கினார். இருவருக்கும் இந்த உலக கோப்பையில் இது மூன்றாவது அரை சதமாகும்.

ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மூன்று விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் முகமது நபி ஆட்டநாயகன் விருதை பெற்றார். 7-வது லீக் போட்டியில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஏற்கனவே இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை தோற்கடித்து இருந்தது. அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்காவை சாய்த்தால் அரை இறுதி சுற்றை எட்டலாம். அதே சமயம் ஐந்தாவது தோல்வியை தழுவிய நெதர்லாந்து அடுத்து சுற்று வாய்ப்பை இழந்தது.

Share This Article
Leave a review