தலையங்கம்…
திரைப்பட நடிகர்கள் அரசியலில் நுழைவது புதிதல்ல. அதில் வெற்றி பெற்றவர்கள் என பலரை குறிப்பிடலாம். என்.எஸ் கிருஷ்ணன் தொடங்கி எம் ஜி ஆர், கே கே எஸ் ஆர், டி ராஜேந்தர் வாகை சந்திரசேகரன், நெப்போலியன், ஜேகே ரித்தீஷ், கருணாஸ் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் எம் ஜி ஆரையை தவிர்த்து எல்லோரும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சார்ந்து தான் இயங்க முடிந்தது.
திரைத் துறையினரின் அரசியல் செயல்பாடு அண்ணாவில் தொடங்கி கருணாநிதி என நீண்டது. அவர்கள் திரைத் துறையிலும் கூட தங்களின் கொள்கைகளை விளக்கி மக்களின் செல்வாக்கை பெற்றார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மிக நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது என்பது சாதாரணமாக நடக்கவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு இணையாக கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களை ஒன்று திரட்டி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக இருந்த காலத்தில் தான் மொழிப்பிரச்சனையை கையில் எடுத்து காங்கிரஸ் கட்சியை வலுவாக எதிர்க் துணிந்தார் பேரறிஞர் அண்ணா. அதற்கு பக்கபலமாக பெரியாரின் கொள்கை இருந்ததை யாரும் மறுத்து விட முடியாது.
இந்த நிலையில் நடிகர் சிவாஜி தொடங்கி தற்போது இயக்குனர் சீமான் வரை அரசியலில் தங்களின் நிலைப்பாட்டை மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்கள். ஆனாலும் மக்கள் வேறு எதையோ எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு வலியுறுத்தி வருகிறது. பல லட்சம் ரசிகர்களைக் கொண்ட சிவாஜியால் அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை.
காரணம் அவர் திரைத்துறையில் தன் நடிப்பாற்றலை காட்டினாலும். அரசியலில் அவரை மக்கள் நம்பவில்லை. எம்ஜிஆர் ஒரு காரணம் அதற்கு. அதனாலே அரசியலில் தோல்வியுற்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு புது கட்சி உருவாவதை யாராலும் தடுக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே இருக்கிற கட்சிகள் செய்ய தவறியதை புதிதாக உருவாகிற எல்லோரும் தங்களின் கொள்கை நிலைப்பாடாக முன் வைத்தாலும் மக்கள் உடனே அவர்களை நம்பி விடுவதில்லை என்பதுதான்.
அப்படி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமலே பல கட்சிகள் தொடங்கப்பட்டு காணாமல் போனதை நாம் காண முடியும். மிகப்பெரிய கொள்கை விளக்கத்தோடு தொடங்கப்பட்ட திமுகவை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்து, தான் உயிரோடு இருக்கின்ற வரை தமிழகத்தின் முதலமைச்சராகவே இருக்க முடிந்ததற்கு காரணம் எம்ஜிஆர் மீது மக்கள் வைத்த நம்பிக்கை. மக்கள் மீது எம்ஜிஆர் மீது வைத்த நம்பிக்கை. இப்போது அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக பணத்தையே நம்பி தான் இருக்கிறது என்று எல்லோரும் சொல்வது போல நாம் கடந்து போக முடியாது. எல்லா நேரங்களிலும் பணம் தான் தீர்மானிக்கும் என்றெல்லாம் அல்ல. கொள்கையும் சில நேரங்களில் வென்றெடுக்கும் என்பது மக்களுக்கு புரியத் தொடங்கியுள்ளது. அதுதான் உண்மையும் கூட.
ஒவ்வொரு கட்சியும் ஒரு கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடிக்கிக்கொண்டே போனாலும் கூட யாரைத்தான் நம்புவது என மக்கள் குழம்பி போய் தான் இருக்கிறார்கள். அவர்கள் குழப்பத்தை போக்க ஏதாவது ஒரு தலைவர் உருவாக மாட்டாரா? என்று மக்கள் ஏங்கிக் கிடப்பதை அறிய முடியும்.
கெஜிர்வால், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற தலைவர்கள் உருவானபோது மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்களின் செயல்பாடும் மக்களை ஏமாற்றவில்லை என்பதற்கு இவர்கள் எல்லாம் ஒரு உதாரணம். இப்படிப்பட்ட ஒரு தலைவரை தான் மக்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில்.
அந்த தலைவர்களில் விஜய் இருக்கிறாரா? என்பது அவரின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும். கட்சிகளின் பலம் எப்போதும் இளைஞர்கள் தான். இளைஞர்களை ஒருங்கிணைக்கிற ஒரு கட்சியை தான் மக்கள் விரும்புகிறார்கள். அந்தத் தலைவரின் செயல்பாடு புரிந்து கொள்ளும் படியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. கட்சி என்பது சினிமா அல்ல. கட்சியின் கொள்கை என்பது சினிமா வசனங்கள் அல்ல. அதை எல்லாம் மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள்.
நடிகர் விஜய் அப்படி சினிமாத்தனம் இல்லாமல் இளைஞர்கள் மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக தன் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு அரசியலை நன்கு அறிந்து தேர்தல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரேயானால் சிறந்த தலைவராக உருவாக முடியும். தேர்தலை சந்திக்கின்றேன் என்கிற போக்கில் போட்டியிடுக்கிற எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது இப்போது நடக்காத ஒரு காரியமாக இருந்தாலும் கூட, எதிர்காலத்தில் அவற்றை சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை முதலில் விஜய் தேர்தல் அரசியலில் முன் வைக்க வேண்டும்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கும் ஒரு அறிவிப்பினை விஜய் வெளியிட்டு இருப்பது தன்னுடைய அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. மாணவர்களில் இருந்து தொடங்குகிற அரசியல் எப்பொழுதும் தோல்வி அடைந்ததில்லை என்பதற்கு உதாரணம் திமுக. ஆனாலும் கூட தேர்தல், அரசியல் ஆகியவை என்பது நெருப்பாற்றை கடக்கும் செயல் என்பதை விஜய் இப்போதிலிருந்து உணர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல் கட்சியை உருவாக்கி, தலைவனாக வழிநடத்த முடியும் என்பது உண்மை. பார்க்கலாம்…..
ஜோதி நரசிம்மன்