யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/plea-can-be-sought-in-non-sexual-offenses-against-women-madras-high-court/
ஏற்கனவே தாம்பரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தை வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தாக்கல் செய்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.