ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மோசடி வழக்கு தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் விரைவில் இரண்டு முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலீட்டுக்கு 30%க்கும் மேல் வட்டி. ஒரே ஆண்டில் ஓஹோவென வாழ்க்கை! என்பதுதான் ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தாரக மந்திரம்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022 மே மாதம் வரை சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.2,438 கோடி.
ஆனால், இந்த முதலீட்டாளர்களுக்கு வாக்கு கொடுத்தது போல 30% வட்டி கொடுக்கப்படவில்லை. எனவே முதலீட்டை திருப்பி கேட்டவர்களுக்கும் முதலீடு பணமும் கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு வழக்கை தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளிவந்தன.
எனவே உடனடியாக நிறுவனத்தின் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மற்றும் துணை நிறுவனத்தின் நிர்வாகிகள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் 14 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த விசாரணை குறித்தான தகவல்களும், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த வழக்கை ஐ.ஜி லெவல் அதிகாரிகள் மட்டுமே கையாள்வதாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில்தான் இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஹரீஷ் என்பவரை கைது செய்ய காவல்துறை தேடி வந்தது. அப்போது இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளராக பணியாற்றி வந்தார்.
இதனையடுத்து அவர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் மேல் விஷாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த தலையை கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் ஸ்கெட்ச் யாருக்கு என்று தெரியாது.

இந்த நிலையில்தான் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பாஜகவின் விளையாட்டு பிரிவின் தலைவராக ஹரீஷ் பணியாற்றியபோதுதான் ஆர்.கே.சுரேஷுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையில் பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இந்த பணத்தை கொண்டுதான் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இவரிடம் விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரலாம் என்று காவல்துறை திட்டமிட்டது.
ஆனால் இந்த திட்டத்தை முன்னரே தெரிந்துகொண்ட ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். ரகசிய விசாரணை, தொடர் கைது நடவடிக்கைகள் ஆகியவை காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதில் முக்கிய தலையை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், இன்னும் ஒருசில நாட்களில் கைதாகவுள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் எதிர் வரும் 14ம் தேதியன்று ‘திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என்று அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஆருத்ரா வழக்கை கொண்டு அண்ணாமலையின் அறிவிப்புக்கு ‘செக்’ வைக்கும் வேலைகள் நடப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆருத்ரா கைது என இரண்டும் தமிழக அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
கைது செய்யப்படுவது,
அரசியல் புள்ளியா?
சினிமா புள்ளியா?
என்பது கைது நடவடிக்கைக்கு பின்னரே தெரிய வரும். அதுவரை காத்திருப்போம்.
நாட்டில் யார் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த ஊழல் மட்டும் குறையவேமாட்டேன் என்று சொல்கிறது. மக்களின் பாக்கெட்டில் இருக்க வேண்டிய பணம் அரசியல்வாதிகளின் லாக்கரில் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.பொறுத்திருந்து பார்ப்போம், யார் யாரை போட்டி போட்டுக் கொண்டு மாடி விடுகிறார்கள் என்று.