நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கி, பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல், சங்கிலியால் அடித்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த 22 -ந் தேதி திருவிழா தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை அன்று வருகிற ஆகஸ்ட் 4 -ந் தேதி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. சொரிமுத்தையனார், பட்டவாரியான், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது .

தினந்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி தமிழ் மாதம் வரும் அம்மாவாசையின் பொழுது காரையார் சொரிமுத்தையனார் கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி 12 நாட்கள் விரதம் இருந்து தாமிரபரணி நதியில் புனித நீராடி பொங்கல் வைத்து படையலிட்டு சங்கிலி பூதத்தார் கோவிலில் சங்கிலி அடித்து தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவார்கள்.

மேலும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் திருவிழாவையொட்டி சுமார் 200 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள், குடில்கள் அமைக்கும் இடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நுழைவாயில், மேற்கூரை உள்ளிட்ட பகுதியில் வர்ணம் பூசுதல், சீரமைப்புகள், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இத்திருழிவில் நேர்த்திக்கடன் செலுத்த ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்க படுவதால் , விபத்து மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க , மாவட்ட காவல் , போக்குவரத்து காவல் , தீயணைப்பு மற்றும் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார் .