- கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாட்டில் கடந்த 12ஆம் தேதி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் கவிதாசன், திவாகர், வேல்முருகன், பிரவீன் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் கவிதாசன், திவாகர், வேல்முருகன் ஆகிய மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன் மற்றும் இரண்டு சிறுவர்களும் ஜாமீனுக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் புகார் அளிக்கப்பட்ட பெண்ணிற்கும் – அவரது குடும்பத்திற்கும் உயிர் பாதுகாப்பு இல்லை, உரிய பாதுகாப்பும் இல்லை எனவே அவர்களுக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது, ஜாமினில் வந்தால் ஆதாரங்களையும் சாட்சிகளையும் மிரட்டி வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.