திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி சாந்தாவுடன்(55) மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு திருக்கோவிலூரில் இருந்து சிறுவானூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அண்டராயநல்லூர் மெயின் ரோடு அருகே புறப்பட்டார். அப்போது சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மரங்களை அகற்றுவதற்காக தோண்டப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டிருந்தது. இந்த மண் குவியல் மீது ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறி கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.
அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சாந்தா சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சாந்தாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் மண் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சாந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.