சமீப காலமாக காட்டு யானைகள் ஈரோடு,சத்தியமங்கலம்,கோவை ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவது தொடர்கதையாகி விட்டது.
தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. அப்போது அவ்வழியே சென்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானைகளை பார்த்தவுடன் சுற்றுலா பயனிகள் செல்போன்களில் படமெடுப்பது,செல்பி எடுப்பது என ஆர்வமிகுதியால் செயல்படுவது வனவிலங்குகளை சில நேரம் கோபமூட்டும் செயலாக அமைந்து விடுகிறது.இது ஆபத்தில் போய் முடிவதை நாம் பார்த்திருக்கிறோம்.
காட்டு யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. சாலையோர வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் போது வாகனங்களில் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்.