13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் கனக்கம்மாச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு தன் வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த டில்லிபாபு(30) என்ற இளைஞர் சிறுமியை கத்தியை காட்டி கடத்தி சென்று பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அறையில் 10 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .
இந்த வழக்கின் இறுதி விசாரணைதிருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திரா தேவி முன்பு நடைபெற்றது. விசாரணையில் டில்லிபாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ஆகவே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி அளித்தார்.
அதில் குற்றம் செய்த வாலிபர் டில்லிபாபுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,
கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறையில் அடைத்து வைத்த குற்றத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ஆகமொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனையும்
மற்றும் 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுப்பவிக்கவேண்டும் என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றத்தின் வழக்கில் 31 ஆண்டுகள் வாலிபருக்கு சிறை தண்டணை அளித்த தீர்ப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் எதிர்வரும் காலகட்டத்தில் தமிழகத்தில் எங்கும் பாலியல் குற்றங்கள் எங்கும் நிகழாத வண்ணம் அமைந்திருந்தது