கடலூர் மாவட்டம் துணிசிரமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு அந்த சுற்று வட்டார பகுதியில் மாணவர்களை வேனில் ஏற்றிவருவது வழக்கம்.இந்த வேன் சிதம்பரம் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து எற்பட்டது வேனில் இருந்த ஓட்டுனர் மற்றும் 14 மாணவர்கள் பத்திரமாக இறங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம் போல் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தினந்தோறும் பள்ளியின் வாகனங்களில் அழைத்து வருவது வழக்கம். இந்த பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று உள்ளது. இன்று காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. இந்த வேனில் 14 மாணவர்கள் இருந்தனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பள்ளி வேனின் முன்புறத்தில் இருந்து லேசான புகை ஏற்பட்டது.

பின்னர் புகை வேகமாக பரவியது. இதைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். உடனே பேருந்தில் இருந்த மாணவர்களை ஓட்டுநர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக கீழே இறக்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மள மளவென பரவியது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். ஆனால் அதற்குள் தனியார் பள்ளி வேனின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமானது. பின்னர் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரண நடத்தினர். வேன் திடீரென தீப்பிடித்தது எப்படி? எதனால் வேனில் இருந்து புகை ஏற்பட்டது என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மாணவர்களை அழைத்துவரும் வேன் இவ்வளவு பாதுகாப்பற்ற முறையில் இயங்குவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.பள்ளி வாகனங்கள் முழு பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.அரசும், பள்ளி நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்.