2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் கரத், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் திரு.தினேஷ் காரா மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2023 மார்ச் மாதத்தில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துகள் 4.97 சதவீதமும், நிகர செயல்படாத சொத்துகள் 1.24 சதவீதமுதம் உயர்ந்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.1.05 லட்சம் கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. இது 2013-14-ம் நிதியாண்டில் ஈட்டிய நிகர லாபத்தை விட சுமார் மூன்று மடங்காகும். ஒட்டுமொத்த நிலையைக் கருதும்போது, ஆரோக்கியமான நிதி நிலையுடன் எந்தவொரு பொருளாதார வீழ்ச்சியையும் தாங்கும் அளவுக்கு வங்கிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வங்கித்துறை பல்வேறு இடர்களைச் சந்தித்தாலும், இந்தியாவில் வங்கிகளின் நிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக கடன் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ள நிலையில், அதன் உட்பிரிவுகளான சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் போன்றவற்றிலும் இலக்குகளை அடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னவென்றால்,கடன் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில், கிராமப்புற மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் கடன் இலக்கு எட்டப்படுவதை உறுதி செய்தல், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான இலக்குகளை எட்டுதல், கிராமப்புற வங்கிகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அவற்றின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்தல், வைப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, சேவைகளை எளிமையாக்குதல் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பில் கவனம் செலுத்துதல் ஆகும்.