சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வடசென்னை மாவட்ட பொருளாளர் கணேசன் தாக்கல் செய்த மனு:
புது வண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கண்டித்து, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆகஸ்ட் 10 அல்லது வேறு ஒரு நாளில் போராட்டம் நடத்த அனுமதி கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து, புது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர், ஜூலை 16ல் உத்தரவிட்டார்.

மாற்று இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி அளித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
எனவே, போராட்டம் நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி கூறியதாவது:
மனுதாரர் அனுமதி கேட்கும் இடத்தில் பொது கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். போரட்டங்களுக்கு அனுமதியில்லை. பொது அமைதி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு, வேறொரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”வரும் 11ல் அரை மணி நேரம் மட்டுமே போராட்டம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது, என்றார்.
இதையடுத்து, ‘மனுதாரர் கோரும் இடத்தில் காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள், அரை மணி நேரம் போரட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும்.
பொதுமக்கள், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது’ என உத்தரவிட்டு மனுவை நீதிபதி முடித்து வைத்தார்.