முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

4 Min Read
சிஏஏ சட்டத்தால் பாதிப்பு அதிமுக அனுமதிக்காது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ள திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! விடியா திமுக அரசின் வனத்துறை 29.4.2024 அன்று யானை வழித் தடம் குறித்த ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப் பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வனமும், வன விலங்குகளும் நாட்டின் செல்வங்கள். அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சீரான இயற்கை மாற்றங்களுக்கும், காலத்தே மழை பொழியவும் வன வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆனால், வனத்தையும், வன விலங்குகளையும் காக்கின்ற பெயரில், காலம் காலமாக மலைப் பகுதிகளில் வசித்துவரும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு அழித்து, அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் எந்தச் செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

யானைகள் குறித்தும், அவைகள் பயன்படுத்தி வருகின்ற வழித் தடங்கள் குறித்தும் முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 2000-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ் நாட்டில் 25 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், தமிழ் நாட்டில் 18 யானை வழித் தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 20 யானை வழித் தடங்கள் இருப்பதாகவும், அதில் 15 தமிழகத்திலும், 5 கேரளா மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் சுமார் 42 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு 29.4.2024 அன்று ஒரு வரைவு அறிக்கையினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

வரைவு அறிக்கை குறித்து 5.5.2024 வரை மக்கள் தங்கள் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் பதிவு செய்யலாம் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து முறையான எந்த ஒரு அறிவிப்பும் தமிழ் செய்தி பத்திரிகைகள் வாயிலாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவோ வனத்துறையால் நேற்றுவரை (9.5.2024) வெளியிடப்படவில்லை. இந்த வரைவு அறிக்கை 161 பக்கங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள், தமிழில் வெளியிடப்படும் அறிக்கைகளை மட்டுமே படித்து புரிந்துகொள்ளக்கூடிய சாமான்ய மக்கள் ஆவார்கள். ஆனால், இந்த அரசு வெளியிட்டுள்ள ஆங்கில வரைவு அறிக்கையைப் படித்து, அதன்மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழ்நிலையில் வரைவு அறிக்கைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து அமைதியான வழியில் போராடுவதற்கான வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. கூடலூர் பகுதியைப் பொறுத்த அளவில், நிர்ணயிக்கப்பட்ட வனப் பரப்பைவிட இரு மடங்கு வனப் பரப்பு நிலம் இயற்கையாகவே அமைந்துள்ள போதிலும், அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் வகையில், அவர்களின் பல்வேறு குடியிருப்புகள் இந்த யானை வழித் தடம் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுபோலவே, இந்த வரைவு அறிக்கையினால் தமிழகத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களும் பெரும் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

யானை வழித் தடம் குறித்து வனத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் எத்தனை ? யானை வழித் தடங்கள் எத்தனை உள்ளன? என்பது குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் விடியா திமுக அரசின், வனத் துறையின் இந்தச் செயல் இயற்கை நீதிக்கும், மலைவாழ் மக்களின் நலனுக்கும் எதிரானது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்த நேரத்தில், அவசர கதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டும் விடியா திமுக அரசிற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்காலத்தில் வனப் பகுதிகளில் இலையுதிர் கால மர வகைகள் அதிக அளவில் வளர்க்கப்படுவதால், கோடை காலத்தில் மூன்று மாதங்களில் அம்மரங்களின் இலைகள் முழுமையாக உதிர்ந்து யானைகள் உண்பதற்கு இலை, தழைகள் கிடைப்பதில்லை. மேலும், யானைகள் விரும்பி உண்ணும் மூங்கில் போன்ற தாவரங்களை தற்போது வனத்துறை வளர்ப்பதில்லை. மேலும், வனப் பகுதிகளில் உண்ணிச் செடி, பார்த்தீனியம் செடி போன்ற விஷச் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதன் காரணமாகவே யானைகள் கோடை காலத்தில் தங்கள் வாழ்விடங்களை விட்டு, உணவுக்காக விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்கின்றன. எனவே, யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்களையும், மூங்கில் வகைகளையும் அதிக அளவில் வளர்த்து, போதிய தண்ணீர் வசதியினை ஏற்படுத்தித் தர வனத் துறையை வலியுறுத்துகிறேன். இந்த அரசு, யானை வழித் தடங்களை அறிவிக்கும் முன்பு, தமிழில் விரிவான வரைவு அறிக்கையினை தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட்டு, மலைவாழ் மக்கள் அவர்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கி, மலைவாழ் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வதற்குண்டான சூழலையும் உறுதி செய்து, முறையான யானை வழித் தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

Share This Article
Leave a review