சூலூரில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் நீர் தொட்டியில் மூழ்கி கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வரும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹரி என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் கட்டிட பணியாற்றி வரும் இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இரவு கட்டிடத்தில் பணியை முடித்துவிட்டு கட்டிடத்தின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து ஹரி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கட்டிடத்தில் வேலை செய்யும் சகத் தொழிலாளர்கள் தண்ணீர் எடுப்பதற்காக தொட்டியில் இருந்த டியூப்பை எடுத்துள்ளனர். வெளியே எடுக்கும்போது கடினமாக இருந்துள்ளது இதனை அடுத்து 2 தொழிலாளர்கள் சேர்ந்து டியூப்பை வெளியே எடுத்துள்ளனர். அப்போது உள்ளே சக தொழிலாளியான ஹரி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழக முழுவதும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.