காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசா? -ரவிக்குமார்.எம்பி

2 Min Read
கீதா பிரஸ்

கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான ‘மகாத்மா காந்தி அமைதிப் பரிசு’ ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1995 இல் உருவாக்கப்பட்ட இந்தப் பரிசு 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், பட்டயமும் கொண்டது. இதற்குமுன் இந்தப் பரிசை நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுட்டு உள்ளிட்ட 18 பேர் பெற்றுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

12 கோடிக்கும் மேற்பட்ட பகவத் கீதை புத்தகங்களை அச்சிட்டுப் பரப்பியுள்ள இந்தப் பதிப்பகம் 1923 இல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு (2023) அதன் நூற்றாண்டாகும்.

கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா, அந்தப் பதிப்பகம் வெளியிடும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பிரசாத் போதார் ஆகியோர் மகாத்மா காந்தியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள், என்றபோதிலும் கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துகளோடு அவர்கள் உடன்படவில்லை.

1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட நபர்களில் பிரசாத் போதார் மற்றும் கீதா பிரஸ் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா ஆகியோரும் அடங்குவர். அத்தகைய பின்புலம் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு இந்தப் பரிசை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

கீதா பிரஸின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதியுள்ள அக்ஷய முகுல் அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்குமார் எம்பி

“ உத்தரப்பிரதேசத்தில் ஒரு சிறு நகரத்திலிருந்துகொண்டு சமய நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தின் நோக்கங்கள் 1926 ஆம் ஆண்டு முதல்,  வரலாற்றில் முக்கியமான தருணங்களில் வகுப்புவாத இந்து அமைப்புகள் மற்றும் அவற்றின் தேசியவாத நோக்கங்களுடன் எவ்வாறு இணைகின்றன என்பதை இந்தப் புத்தகம் ஆராய்கிறது, மேலும் கீதா பதிப்பகத்தின்  இதுவரை ஆராயப்படாத பாத்திரத்தை வெளிப்படுத்துகிறது. “பிரிவினைக்கு வழிவகுத்த ஆண்டுகளில், கல்யாண் பத்திரிகையின் பக்கங்கள் மூலம், கீதா பிரஸ் என்னும் பதிப்பகம் இந்து-முஸ்லிம் பிரிவினையை ஊக்குவித்தது, காந்தியை தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் விமர்சித்தது மட்டுமல்லாமல், வகுப்புவாத வெறுப்பையும் தூண்டியது.”

“சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், இந்து சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போதும், பசு பாதுகாப்பு இயக்கத்திலும் கீதா பிரஸ் என்னும் பதிப்பகம் மீண்டும் இந்து அமைப்புகளின் வாகனமாக மாறியது. அரசியல் ரீதியாகவும் அது மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டது.ராம் ராஜ்ய பரிஷத், ஹிந்து மகாசபா போன்ற பழமைவாத அமைப்புகளுக்கு வெளிப்படையாக ஆதரவு கோரியது, அத்துடன் கம்யூனிசத்தின் பரவலுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தியது.”

“அமைதி, அகிம்சை மற்றும் மனிதத் துன்பங்களைப் போக்க தன்னலமின்றி உழைத்த ஒருவருக்கு, குறிப்பாக சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவர் – அவர் உயர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படலாம்” என இந்தப் பரிசுக்கான தகுதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அப்பட்டமான பழமைவாத, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்துத்துக்கு மகாத்மா காந்தியடிகளின் பெயரால் உள்ள இந்தப் பரிசை வழங்குவது மகாத்மா காந்தியடிகளையும், மதச்சார்பின்மையையும் ஒருசேர அவமதிப்பதாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Share This Article
Leave a review