மயிலாடுதுறை அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கழுத்தை நெரித்து கொன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் சசிகுமார்(28). இவர் கார் டிரைவர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணிசிரமேட்டை சேர்ந்தவர் மணிமாறன்(31). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில், கம்பி கட்டும் வேலைக்காக மணிமாறன் தனது மனைவியுடன் சீர்காழி பிடாரி கீழவீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நண்பனை சந்திப்பதற்காக மணிமாறன் வீட்டுக்கு அடிக்கடி சசிகுமார் வந்து சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மணிமாறன் வீட்டில் சசிகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சென்று சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பன் சசிகுமாரை கழுத்தை நெரித்து மணிமாறன் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு பின்னர் சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.