தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் கை சிதறி 4 வயது சிறுமி உயிர் இழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலிசார் விசாராணை.
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி எந்த அளவுக்கு மகிழ்ச்சியான பண்டிகையோ அதே அளவுக்கு மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய பண்டிகையும் கூட. ஏனெனில், கண்கவர் பட்டாசுகள் சில நேரங்களில் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி விடும். இதனால் பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று அரசு வருடந்தோறும் அறிவுறுத்தல்களை வழங்கி தான் வருகிறது. ஆனாலும், சில அசம்பாவிதங்கள் நடக்கவே செய்கின்றன. அப்படியொரு சம்பவம் தான் ராணிப்பேட்டையில் நடந்திருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே உள்ள ஆதி திராவிட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ரமேஷ் வயது (28) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்வினி வயது (25) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 4 வயதில் நவிஷ்கா வயது (4) என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவரது சொந்த ஊரான மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது ரமேஷின் அண்ணன் விக்னேஷ் வயது (31) பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது விக்னேஷ் வைத்த ஒரு பட்டாசு சிறுமின் மீது சிதறி விழுந்து வெடித்தது. இதில் சிறுமியின் மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உறவினர்கள் சிறுமையை அழைத்துக் கொண்டு அருகாமையில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிறுமி உயிர் இழந்ததை அறிந்த உறவினர்கள் கதறி கதறி அழுத காட்சி, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாழைப்பந்தல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி அன்று குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ஒரு பட்டாசு சிதறி சிறுமியின் மீது விழுந்து சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.