போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு அவர்களது கோரிக்கைகள் குறித்து முடிவு எட்டப்படும் என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கடலூரில் செய்தியாளிடம் பேட்டி அளித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம், சன்னாசிப்பேட்டை அருகே உள்ள பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள சிவசங்கர் கலந்து கொண்ட போது அடித்தடி பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

இதில் 9 போலீசார் காயம் அடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம், ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கு விசாரணை கடலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் உட்பட 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு முடிவு எடுக்க படும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு உள்ளாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு முழுவதுமாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சிவசங்கர் பேட்டியளித்தார். மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை.
பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது என அவர் கூறினார்.