அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடிபழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஒற்றை தலைமை என்ற கோஷம் ஒலிக்க தொடங்கிய பிறகு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் அடுத்து நடைபெற்ற அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். இது அக்கட்சி பொதுக்குழுவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாகவும், இதுகுறித்த கட்சியின் சட்ட விதிகள் திருத்தங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.