மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நல்லவேளையாக வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் பெரிதாக இல்லாத நிலையில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் அஜீத்குமாரும் அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்க்காக வெளியூர் சென்றுள்ளனர். வழக்கம்போல அந்த தெருவில் இன்று இயல்பு நிலை இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில் இருந்து பெரும் வெடி சத்தம் கேட்டுள்ளது.

வெடி சத்தம் கேட்டதை அடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பூட்டிய வீட்டில் இருந்து வெடி சத்தம் வருகிறது என்ன ஆனது தெரியவில்லை என பதட்டத்தில் மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த கரிமேடு போலீஸார் வெடிசத்தம் வந்த வீட்டில் ஆய்வு செய்த போது அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பூட்டிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏதும் நிகழவில்லை. இதையடுத்து இந்த வெடி சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் இருந்து வெடிச்சத்தம் கேட்டதும் அதனை தொடர்ந்து அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்திருப்பதும் மதுரை கரிமேடு பகுதியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் யாராவது நாட்டு வெடிகுண்டு பயன்படுத்துகிறவர்கள் உள்ளார்களா அல்லது அவர்கள் மீது அப்படி வழக்கு ஏதாவது இதுவரை பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்கிற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் திடீரென இப்படி நாட்டு வெடிகுண்டு வெடித்து இருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கருதுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்துகிற ரவுடிகள் பட்டியலை எடுத்து விசாரணை மேற்கொள்ள போல போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் மதுரை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்ன காரணமாக பூட்டிய வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கும் யாருடைய சதி வேலை இது என்னும் கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கின்றனர்.