சென்னை: தலைநகர் சென்னையில் மழைக் காலங்களில் வெள்ளம் தேங்காமல் இருக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மிக வேகமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது.
சென்னையில் மழைக் காலங்களில் கடந்த காலங்களில் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொஞ்ச நேரம் மழை பெய்தாலே நன்கு நீர் தேங்கிவிடும். அவை வடியவே நாட்கள் கூட ஆகும். இப்போது நிலைமை எவ்வளவோ மாறியுள்ளது.
நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அடுத்த கட்டமாக மேலும் பல பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
வெள்ள பாதிப்பு:
சென்னையின் வெள்ளப் பாதிப்பு மண்டலங்களில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தொடங்க உள்ளது.
இதற்கான திட்டத்தைப் பரிசீலிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் தேசிய குழு டெல்லியில் கூடுகிறது. இதற்குத் தேவையான நிதியைத் தேசிய பேரிடர் நிதியில் இருந்து பெறுமாறு 15வது நிதிக்குழுவின் பரிந்துரை அளித்திருந்தது.
பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இதே பரிந்துரையை அளித்திருந்தது. நகரில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று பல திட்டங்களை முன் மொழிந்துள்ளன.
அவை மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் நகரில் வெள்ள பாதிப்பைத் தடுக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது.
மொத்தம் 34 ஐடியாக்கள்:
ரியல் டைமில் சென்னையில் எங்கு எந்தளவுக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது என்பதைக் கண்டறியத் தனியார் நிறுவனம் ஒன்று ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. கடந்த 2021, 2022 வடகிழக்கு பருவமழை சமயத்தில் இதைப் பயன் படுத்தியுள்ளனர். அது வெற்றிகரமாகவே இருந்த நிலையில், வரும் காலத்தில் இதை மேலும் விரிவாகப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய 34 தீர்வுகளையும் வழங்கியுள்ளார். இப்போது எண்ணூர், கூவம், அடையாறு சிற்றோடை, முட்டுக்காடு ஆகியவை மூலம் வெள்ள நீர் கடலில் சென்று சேர்கிறது.
இந்த நீர் வழிப்பாதைகளின் அழுத்தத்தைக் குறைக்க பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் கூடுதலாக நீரை எடுத்துச் செல்ல ஆறு இடங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நீர் எளிமையாகக் கடலில் சென்று கலப்பதை உறுதி செய்ய உபரி சேனல்களை உருவாக்குவது வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
உபரி நீர்:
இந்த உபரி சேனல்களில் ஆக்கிரமிப்பைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்பது வரை விரிவான பரிந்துரையை அந்த தனியார் நிறுவனம் அளித்துள்ளது. நகரில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
அதில் மணிமங்கலம் குளத்தில் இருக்கும் உபரி நீரை அடையாறுக்கு கொண்டு செல்ல முறையான உபரி வாய்க்கால் இல்லாததே கரசங்கல் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டில் இந்த பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளம் இந்தளவுக்கு உயர்ந்ததால் அப்போது அங்கே கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது அங்கு மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மணிமங்கலம் குளத்தில் இருந்து உபரி வாய்க்கால் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நடவடிக்கை:
அதேபோல், ரெட்டேரி ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல உபரி வாய்க்கால் எதுவும் இல்லை. அங்குள்ள கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 34 திட்டங்களை அந்த தனியார் நிறுவனம் முன்மொழிந்துள்ள நிலையில், அவற்றை தீவிர ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.