சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை
திட்டமிட்டு வருவதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக காலை 9 மணியில் இருந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் இனி அமலாக்கத்துறை என்ன வேண்டுமானாலும் விசாரிக்கலாம்.
தினசரி விசாரணை:
இன்று அவரிடமே 50 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் செந்தில் பாலாஜி சரியாக பதில் அளிக்காத நிலையில் அவரின் கஸ்டடியை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தங்கி உள்ளார். அங்கே உள்ளே விசாரணை கைதிகளுக்கான அறையில் அவர் உள்ளார். ஆனால் விசாரணைக்கு சாஸ்திரி பவனில் இருக்கும் விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். இதுதான் தினசரி நடைமுறை.
கைது நடவடிக்கை:
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவரிடம் வாங்கப்படும் வாக்குமூலம் சிலருக்கு குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடும் பணிகள் அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத் துறைக்கு தெரியப்படுத்தி விட்டது. அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இப்போது செந்தில் பாலாஜி கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அசோக்கை கைது செய்யும் திட்டங்கள் முடுக்கிவிடப்படலாம்.
அதிகாரிகள்:
அதோடு சில அதிகாரிகள் செந்தில் பாலாஜி வாக்குமூலம் மூலம் கைது செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி கொடுக்கும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.