- தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி, தாக்கிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வேலூர் சிறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோவை சரவணம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக 2023 ஏப்ரல் முதல் 2024 ஜூன் வரை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக அஷ்வின்குமார் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி, தனிமைச் சிறையில் அடைக்கும் சிறை அதிகாரிகள், அடித்து சித்ரவதை செய்து வருவதாகவும், அதுகுறித்து கேள்வி கேட்டால், இருட்டு அறையில் அடைத்து துன்புறுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த துன்புறுத்தல்கள் காரணமாக கைதிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதை வெளியில் தெரியாமல் அதிகாரிகள் மறைத்து விடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதிகளை துன்புறுத்தும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறைகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.