விழுப்புரத்தில் நடைபெற்ற எழுபதாவது கூட்டுறவு வார விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது விவசாயிகளையும் முதலாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உருவாக்கியவர் கலைஞர். கிராமப்புறங்களில் 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் கூட ஒரு பால்கோவா நிறுவனம் உருவாக்கி அதன் மூலம் தன்னை முதலாளிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறார்கள். கடன் தள்ளுபடி ஆனாலும் கூட விவசாய குடும்பங்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு கூட 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.

எந்தப் பகுதியில் எந்தத் தொழில் செய்யலாம் என உணர்ந்து, கடன் பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களையும் தொழில் அதிபர்களாக உருவாக்கி காட்டுவது தான் கூட்டுறவு சங்கங்கள். சிறு குரு தொழில் மட்டும் அல்லாமல் மாற்று திறனாளிகளின் முன்னேற்றத்திற்கும் பல திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்று பேசினார். அந்த விழாவில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சுய உதவி குழுக்கள் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம் கூட்டு குடும்பமாக வாழ்வதற்கே இப்போது கஷ்டப்படுகிறோம்.
நாட்டையே கூட்டு குடும்பமாக மாற்று கிற முயற்சி தான் கூட்டுறவு சங்கங்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை கொண்டு வந்தவர் கலைஞர். ஏன் கொண்டு வந்தார் என்றால் விவசாயிகள் வியாபாரிகள் என எல்லோரும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக கொண்டு வந்தவர் கலைஞர். கூட்டுறவு கடன் பெற்று தொழில் செய்வது தான் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கினோம். மாணவர்கள் படிக்க வேண்டும். அத்தோடு விளையாட்டு பயிற்சியும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் வாங்குகிற கடன்களை வளர்ச்சியை நோக்கி பயன்படுத்த வேண்டும். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தவர் தமிழக முதல்வர்.

கூட்டுறவு சங்கங்களில் புதிய புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் இந்த சங்கங்களை இயக்கி வந்த நிலையில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டு அவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து சங்கங்களை இயக்கி வருகிறார்கள். புதிய உறுப்பினர்களை சேர்த்து பல தொழில்களை ஏற்படுத்தி சங்கங்களை முன்னேற்ற வேண்டும் என்று பேசினார். முன்னதாக விழாவில் விழுப்புரம் மல்லர் கம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பார்வையிட்டு அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.