செய்யாரில் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழில்பூங்கா தொடங்கப்பட்டு தற்போது 13 நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
இதன்மூலம் 24432 பேர் நேரடியாகவும், 75 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பார்த்து வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2,300 ஹெக்டர் தொழில்பூங்கா உருவாக்கப்பட்டது.இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இதன்மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், ஒரு லட்சம் நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்றுவருகின்றனர்.மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழில்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாக இப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் சிப்காட் பகுதி 3 அமைக்க தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இதில் செய்யார் வட்டத்தில் மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவுக்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த நிலத்தில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.தற்போது 1200 ஏக்கர் அளவிற்கு நில எடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளது.இதில் நஞ்சை நிலம் எதுவும் இல்லை. இந்த நிலையில், சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் தலைமையில் தினசரி 15 முதல் 20 நபர்களை கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்திவந்தனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து நில எடுப்பு செய்ய அனுமதித்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.பணி செய்த காவலர்களை தாக்கினர். பொது உடைமைகளை சேதப்படுதினர். இதன்விளைவாக கிருஷ்ணகிரி அருள் உள்பட 19 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்டடனர்.இதில் ஏற்கனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் மற்றும் 6 நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் பச்சையப்பன், தேவன், சோழன், திருமால் மற்றும் மாசிலாமணி ஆவார்கள்.இவர்களின் குடும்பத்தினர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையில் இருந்து விடுவிக்க ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.