கல்வராயன் மலையில் கொட்டி தீர்த்த கனமழையால் கோமுகி அணைக்கு வந்த நீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக ஆட்டில் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை, கச்சிராபாளையம், வடசிறுவள்ளூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

குறிப்பாக கல்வராயன் மலையில் உள்ள குண்டியாநந்தம், கரியாலூர், வெள்ளிமலை, சேராப்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்த கனமழையால் கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகளில் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஏற்கனவே கோமுகி அணையில் நீர்மட்டம் 44 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை கோமுகி ஆற்றில் வெளியேற்றினர்.
இதன் காரணமாக கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ள தச்சிராபாளையம், வடக்கனந்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் 4 மணி அளவில் கல்வராயன் மலையில் இருந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கன அடியாக குறைந்தது. இதனை அடுத்து கல்வராயன் மலையில் இருந்து அணைக்கு வந்த 900 கன அடி நீர் உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கோமுகி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தியாகதுருகம் அடுத்த விருகாவூர், அசகளத்தூர் இடையே தரை பாலத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நாய் ஒன்றே விருகாவூர் கிராம இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே கல்வராயன் மலை சேராப்பட்டு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மழை அடிவாரப் பகுதியான கள்ளிப்பட்டு, புதுப்பாலப்பட்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதனால் கள்ளிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தண்ணீரில் நடந்த படி, தங்களது வகுப்பறைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு சென்றனர். கண்ணன் என்பவருக்கு சொந்தமான பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் அங்கு வளர்க்கப்பட்ட கோழிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 2 ஆயிரம் கோழிகள் செத்தன.