வடமேற்கு பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி முகாமிற்கு பாதுகாப்பு வழங்க சென்ற போலீஸ் அதிகாரிகளின் வாகனம், தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியது . இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 20-கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது இன்று அதிகாலை மேற்கு பாகிஸ்தானிலுள்ள பாஜூரில் போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக போலீஸ் குழு வெளியே சென்றபோது நடந்துள்ளது .
காயமடைந்தவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் பஜாருக்கு தெற்கே 133 கிமீ தொலைவில் உள்ள மாகாண தலைநகரான பெஷாவருக்கு அவர்கள் மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரையிலும் பொறுப்பேற்கவில்லை.
சமீபத்திய ஆண்டுகளில், TTP என்ற சுருக்கப் பெயரால் அறியப்படும் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான , போலியோ தடுப்பூசி பணியாளர்களையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் காரிஸன் நகரமான அபோதாபாத் நகரில் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனைக் கண்காணிக்க அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ போலி தடுப்பூசி இயக்கத்தை ஏற்பாடு செய்தது , இதன் தொடர்ச்சியாக போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்திற்கு அங்கு கடும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது .
மேலும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மதத் தலைவர்களும் போலியோ தடுப்பூசியில் பன்றி இறைச்சி மற்றும் மதுவின் தடயங்கள் இருப்பதாக தவறான தகவலை பரப்பினர், அவை இஸ்லாத்திற்கு எதிரானவைகளாக கருதப்படுகிறது .
இன்றுவரை போலியோ வைரஸ் வகை 1 (WPV-1) நோயிலிருந்து விடுபட்டதாக இன்னும் அறிவிக்கப்படாத இரண்டு நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமே.
2023 -ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆறு போலியோ வழக்குகள் பதிவாகியுள்ளன , இது கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதிவாகியிருந்த 20 போலியோ வழக்குகளை ஒப்பிடுகையில் சற்று முன்னேற்றம் அடைந்த்துள்ளதாக கருதப்பட்டது .
சமீபகாலங்களாக பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போலியோ சொட்டு மருந்து குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இஸ்லாமாபாத்தை தலைமை இடமாக கொண்ட ஆராய்ச்சி அமைப்பான பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் கான்ஃபிக்ட் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் தொகுத்த தரவுகளின்படி,2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் 600 க்கும் மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன, இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகரித்து 950 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது .
எதிர்பாராத இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தினால், அப்பகுதியில் நடைபெறுவதாக இருந்த போலியோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.”இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் காவல்துறையினரின் மன உறுதியும் முனைப்பும் எந்த வகையிலும் குறைந்து விடாது” என கைபர் பக்துங்க்வா பிராந்திய காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஷா தெரிவித்து உள்ளார் . இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும், பயங்கரவாத தாக்குதல்களையும் மேற்கொள்ள அடுத்து வரும் ஆட்சியில் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.