கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்றம் உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட 3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது. அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின் மேலும் சில பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாாிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதாசில்தார் மனோஜ் முனியன் மாவட்ட ஆட்சியரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.மாநில அளவில் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர். ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி ஒருகட்டத்தில் போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கரலிங்கம், மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாநில துணைத்தலைவர்கள் மணிகண்டன், அர்த்தநாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் காதர்அலி,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.