மகாராட்டிராவில் 4 ஆண்டுகளில் 4 வகையான கட்சித் தாவல்கள்! கி.வீரமணி விமர்சனம்

4 Min Read
கி.வீரமணி

கடந்த இரண்டு நாள்களாக மகாராட்டிர மாநிலத்தில் நடந்துவரும் அரசியல் கட்சித் தாவல்கள் ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்திடும் அருவருக்கத்தக்க அரசியல் அநாகரிகத்தின் உச்சமாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”4 ஆண்டுகளில் 4 பதவியேற்புகள்; நாலு வகையான ஆட்சி ‘அவதாரங்கள்!’ இதற்கு மூலகர்த்தா – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க., அதன் ஒன்றிய ஆட்சி என்பது உலகறிந்த செய்தியாகும்!

2019 நவம்பரில் (பொதுத் தேர்தல் நடந்த பிறகு) நவம்பர் 23 இல் பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
மூன்றே நாள்கள் மட்டுமே இது நீடித்து, பிறகு கவிழ்ந்தது!

2019 நவம்பர் 26 இல் சிவசேனாவின் உத்தவ்தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால், இந்த அரசும் கவிழ்ந்தது!

கடந்த ஆண்டு ஜூன் 30 இல், சிவசேனாவிலிருந்து பிரிந்து வந்த ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

நேற்றுமுன்தினம் அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவருடன் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்!

கூடுவிட்டு கூடு பாயும் அரசியல்!

கூடுவிட்டு கூடும் பாயும் இந்த அரசியல் வித்தைகள் முடிந்துவிட்டதாகவும் நாம் முடிவுக்கு வர முடியாது; ஏனெனில், அடுத்து அமைச்சர்களின் இலாகா பிரிப்புக்குப் பிறகு இந்த வேலி தாண்டும் பேரங்கள் நடந்தால் அது அதிசயமல்ல; பொது ஒழுக்கச் சிதைவுபற்றி யாருக்கும் வெட்கமிருக்கிறதா?
இவை வெளித்தோற்றத்திற்குத் தானே  நடப்பது போல் தோன்றினாலும், இந்த நாடகத்தின் ‘‘சூத்திரதாரி’’ – இயக்குவது டில்லியே என்பது அரசியலில் சற்று விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்!
மோடி அரசு பாசிச தாக்குதல் போன்ற அரசமைப்புச் சட்ட விதிகளை மதியாமை, கட்சிகளைப் பிளந்து ‘குதிரை பேரம்‘ நடத்தி, மக்கள் வாக்களித்த கட்சிகளை ஆட்சி அமைக்கவிடாமல், தாங்கள் உள்ளே ஊடுருவி, பா.ஜ.க. ஆட்சிகளை மாநிலங்களில் அமைப்பது; ஒத்துவராதவர்களை வருமான வரித்துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை ஆகிய ‘திரிசூலத்தைக்‘ காட்டி, அச்சுறுத்தி பணிய வைப்பது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவது கண்கூடு.

இதற்குப் புதுச்சேரி போன்ற சிறிய யூனியன் பிரதேசங்கள்முதல் மகாராட்டிரா போன்ற பல பெரிய மாநிலங்கள்வரை எடுத்துக்காட்டுகளாக ‘பளிச்‘சென்று காட்சியளிக்கின்றன!

பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகளிடம் ஒருவித அச்சத்தை விதைத்து, வழக்குகள், கைதுகள்மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்றவைமூலம், நமது முதலமைச்சர் சரியாக சொல்லியபடி ‘நரித்தனங்களில்’ ஈடுபட்டு வருகின்றது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி!
பாட்னா ஜூரம் – பி.ஜே.பி.யின் வயிற்றில் புளி!
‘பாட்னா ஜூரம்‘ பா.ஜ.க.வை வெகுவாகப் பிடித்து உலுக்குகிறது; ஏற்கெனவே கருநாடகத் தோல்வி – பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகங்களையும், வித்தைகளையும் புறக்கணித்துவிட்டு, மக்கள் ஒருவகை அமைதிப் புரட்சியை ‘ஓட்டப்பர்களாகி’ செய்து காட்டியது பா.ஜ.க.வின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டிருக்கிறது.

அதனால், பிரதமர் மோடி ‘தன்னிலை’ மறந்து – நிலைகுலைந்து – குறுக்குவழியில் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களைத் தொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது கடுஞ்சொல் வீசுகிறார்.

‘ஊழல் செய்பவர்களைத் தப்ப விடமாட்டோம்‘ என்று உரத்த குரலில் எச்சரிக்கிறார்;  பலே பலே அந்தக் குரலின் ஒலி ஓசை அடங்குமுன்னர், அஜித்பவார் போன்றவர்களுக்கு ஊழல் வழக்கு அமலாக்கத் துறை பாய்ச்சல் எல்லாம் மாறி, துணை முதலமைச்சராக மூன்றாவது முறை அவரை பதவியேற்க வைத்து – சரத்பவாரின்  கட்சியை பலவீனப்படுத்தி, அக்கட்சியை உடைப்பதற்கு சகலவிதமான முறைகளையும் கையாளுகின்றனர்.

எதிர்க்கட்சிகளில் இருந்தால் ஊழல்வாதிகள் – பி.ஜே.பி.,க்கு வந்தால் ‘புனிதர்’களா?
எதிர்க்கட்சியில் இருந்தால் ‘‘ஊழல்வாதிகள்’’ – வழக்குகள்; பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டுக்கு அவர்கள் மாறிவிட்டால், படமெடுத்தவர் பெட்டிப் பாம்பாக மாறி, குற்றவாளிகளை ‘புனிதர்’களாக்கிய புளகாங்கிதத்தோடு உலவுகிறார்கள்!

காங்கிரஸ் செயலாளர் ஒருவர், ‘‘பா.ஜ.க. ஒன்றிய அரசு ஒரு லாண்டரி மிஷனாகி, சில சோப்புகளைப் (Detergents) போட்டு, அந்த ஊழல் கரைகளை உடனடியாகப் போக்கி, ‘புனிதர்’களாக அவர்கள் அவதாரம் எடுக்க வாய்ப்புகளை உருவாக்கிவிடுகின்றனர்’’ என்றார்.

தமிழ்நாட்டில் கட்சித் தாவல்கள் –  பேரங்கள் பலிக்காது!
தமிழ்நாட்டில் – பெரியார் மண்ணில் – இந்த கட்சித் தாவல், அரசியல் பேரங்கள் செல்லாது என்பதால், ‘திரிசூலங்கள்’ பாய்ச்சப்படக் கூடும் என்பதால், ஆளும் கட்சியான தி.மு.க., அதன் தலைவர், அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு மக்கள் பலம் – பேராதரவின்மூலம் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும், சமூகநீதியையும், மாநில உரிமைகளையும் காப்பவராக உறுதியான முடிவின் உண்மைப் போராளி தலைவராக எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றவராக உள்ளார்!
பழைய நெருக்கடி காலத்தில் (Emergency) அனுபவித்த கொடுமைகள் என்ற நெருப்பாற்றில் நீந்தியவர்களுக்கு, இந்த அச்சுறுத்தலும், அடக்குமுறை அம்புகளின் ஏவுவதல் எவையாயினும் அதனைக் களப்பணி, அறிவுப் பணி, உறுதியான உத்திகள்மூலம் வென்று காட்டி, வீர வரலாறு படைத்துக் காட்ட முடியும்.
வரலாற்றில் காணாமற்போன சர்வாதிகாரிகள்!” எனக் கூறியுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் முதல் சொற்றொடரே, ‘We the People’ என்றுதான் தொடங்குகிறது. இந்த மக்களதிகாரம் முன்பு, மற்ற அதிகாரங்கள் இறுதியில் தோல்வி அடைவது உறுதி! சர்வாதிகாரிகள் வரலாற்றிலிருந்து காணாமற்போய் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத் தேவையில்லை!” எனக் கூறியுள்ளார்

Share This Article
Leave a review