சென்னையில் பணிகளுக்காக 374 மரங்கள் வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது அன்புமணி புகார்

0
36
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை வெளிவட்டச்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக 374 மரங்கள் வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சென்னை வெளிவட்டச்சாலையில்,   திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக அப்பகுதியில் நன்கு வளர்ந்திருந்த 374 நிழல் தரும் மரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன.  வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும்  50 முதல் 60 ஆண்டுகள் வயதுடையவை. அப்பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்த மரங்கள்,  மக்களின் விருப்பத்திற்கு மாறாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு இணையாக நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வெளிவட்டச்சலைகள்  விரிவாக்கம் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது.  இந்த சாலைகளின் விரிவாக்கத்திற்காக வெட்டப்படும்  மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படவுள்ளன என்பதும் நிம்மதியளிக்கும் நடவடிக்கை. ஆனால்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் மரங்களை பாதுகாப்பது சாத்தியமாகியுள்ள நிலையில், அவற்றை வெட்டி வீழ்த்த வேண்டுமா? என்பது தான்  பாட்டாளி மக்கள் கட்சியின் வினா.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் வளர்ச்சி அல்லது கட்டமைப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு மரம் கூட வெட்டப்படுவதில்லை. மாறாக, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மரங்கள் அதிகபட்சமாக 6 மாதங்களில் முழுமையாக அந்த இடத்துடன் பொருந்தி தழைத்து வளர்கின்றன. இதற்காக ஆகும் செலவும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு ஆகும் செலவை விட குறைவு. மாறாக, மரங்களை வெட்ட அனுமதித்துவிட்டு,  வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக 10 மரக்கன்றுகள் அல்லது 12 மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது; இது 100 விழுக்காடு பயனளிக்கும் தீர்வு அல்ல.

கடந்த சில மாதங்களில் மட்டும் சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 182 மரங்கள், பனகல் பூங்கா மெட்ரோ தொடர்வண்டி நிலையத்திற்காக 216 மரங்கள்,  திருமங்கலம் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்திற்காக 148 மரங்கள்,  மத்திய கைலாஷ் மேம்பாலத்திற்காக 105 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன/வெட்டப்படுகின்றன.  தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டிருந்தால்  இந்த மரங்களை வீழ்த்தாமல் பிடுங்கி, வேறு இடங்களில் நட்டு வளர்த்திருக்க முடியும். கிழக்கு கடற்கரைச் சாலையில்  வெட்டப்பட்ட ஆலமரம் ஒன்றையும், திருப்போரூரை அடுத்த வெண்பேடு கிராமத்தில்  வெட்டப்படவிருந்த ஆலமரம் ஒன்றையும்  பசுமைத்தாயகம் அமைப்பு வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு  வெற்றிகரமாக வளர்த்து வருகிறது.

எனவே,  இனிவரும் காலங்களில்  நெடுஞ்சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கும்  போதும், பிற கட்டுமானப் பணிகளின் போதும் அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை மத்திய, மாநில அரசுகளின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; உட்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் போதே, கட்டுமான இடத்தில் உள்ள மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு பராமரிப்பதற்கான பணிகளையும் அதன் அங்கமாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here