திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் புரட்சி பாரதம் கட்சியின் திருவாலங்காடு வடக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு அருகில் அமர்ந்திருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அசோக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அசோக் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் பொன்னேரி அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பொன்னேரி அருகே பதுங்கி இருந்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த மனோகர் (24), சின்னு என்கிற அருண் குமார் (21), விமல் (எ) விமல்குமார் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மே மாதம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் தகராறு செய்த மனோகரனை அசோக் குமார் அடித்து பொதுமக்கள் முன்னிலையில் முட்டி போட வைத்ததாகவும், இதனால் மனோகரனுக்கு அசோக்குமார் மீது விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கஞ்சா பயன்படுத்துவதையும், விற்பதையும் அசோக்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதால் போலீசார் அடிக்கடி கைது செய்வதும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அசோக்குமாரை அரிவாளால் வெட்டி படு கொலை செய்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல் நிலையத்தில் போட்டுக் கொடுத்ததாலும், கோவில் திருவிழாவின் போது தகராறு ஈடுபட்டதாலும் மூன்று இளைஞர்கள் நடத்திய கொலை சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.