நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் இயற்கை உபாதை கழிக்க சென்ற 3 பெண்கள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இந்நிலையில் கூடலூர் அடுத்த கொலப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தும், அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவோ, அல்லது சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வசந்தராஜ், வைதேகி ஆகியோரின் 4 வயது மகள் கிருத்திகா என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்க முயற்சித்துள்ளது. அப்போது மக்கள் எழுப்பிய சத்தத்தால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமி கிருத்திகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஆறு கூண்டுகளை அமைத்துள்ளனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இரண்டு வனக்கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா இவரது மகள் நான்சி மூன்று வயது அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்றது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு பின் தொடரவே சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு சென்றுவிட்டது. இதனை தொடர்ந்து குழந்தையை மீட்டெடுத்த பொதுமக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.

குழந்தை நான்சியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை எழுப்பி உள்ளது. இதனால் குழந்தையின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் இரங்கினர். இதனால் தேவாலா பந்தலூர் சேரம்பாடி உப்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.