கொல்கத்தா: 10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா மற்றும் 3-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணிகள் 3-வது முறையாக உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இன்று மோத உள்ளன. நடப்புத் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 7 வெற்றி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலியா அணி முதல் 2 லீக் ஆட்டங்களில் இந்தியா, தென் ஆப்ரிக்காவிடம் மண்ணைக் கவ்வியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் அபாரமாக வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தடுமாறினாலும் மேக்ஸ்வெல் – கம்மின்ஸ் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் கரை சேர்ந்தது. லீக் சுற்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுப்பதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் முன்னாள் சாம்பியன் (5 முறை) ஆஸ்திரேலியா வரிந்துகட்டுகிறது. 14 உலக கோப்பையில் 9வது முறையாக அரையிறுதியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதே சமயம், 1992ல் முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அந்த தொடரிலேயே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை 4 அரையிறுதியில் விளையாடி இருந்தாலும் அந்த அணிக்கு இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு கிட்டியதே இல்லை. டி காக், மார்க்ரம், டுசன், கிளாஸன், மில்லர் என அதிரடி வீரர்கள் அணிவகுப்பது தென் ஆப்ரிக்காவின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுடன் சமீபத்தில் மோதிய ஆட்டங்களில் பெரும்பாலும் தென் ஆப்ரிக்காவே ஆதிக்கம் செலுத்தி உள்ளதாலும், அந்த அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இரு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறத் துடிப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்று நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.