காதலை உதறித் தள்ளியதால் 24 வயதான எம்பிஏ பட்டதாரி பெண்ணை தனது நண்பர்கள் உதவியுடன் , சென்னையிலிருந்து புதுச்சேரி கடத்தி சென்று கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகி மற்றும் அவரது நண்பர்களைத் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு அவரது பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் ,
சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக மாணவரணிச் செயலாளரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.
மேலும் இதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான எம்பிஏ பட்டதாரியான இளம்பெண் ஒருவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த இளம்பெண், கோகுலகிருஷ்ணனிடம் பழகுவதைத் தவிர்த்தார். செல்போனில் பேசுவதையும் நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 21-ந் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கடத்திச்சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்துக் கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர்.
மேலும் குற்றவாளிகளின் மொபைல் போன் எண்களை ஆய்வுசெய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் , அந்த கும்பல் இளம்பெண்ணைப் புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றில் அடைத்துவைத்து இருப்பது கண்டறியப்பட்டது
உடனடியாக அங்குச் சென்ற தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அந்த இளம்பெண், தனது விருப்பம் இல்லாமல் கோகுலகிருஷ்ணன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக புதுச்சேரிக்கு காரில் கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து கோகுல் கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்களுடன் போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்