2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்-கோலாகலமாக நிறைவு -பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

2 Min Read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது.

- Advertisement -
Ad imageAd image

ஒலிம்பிக் 2024இன் நிறைவு விழா பாரிஸ் நகர மைதானத்தில் நள்ளிரவு 12.30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது.

இந்த நிறைவு விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் (Billie Eilish), ஸ்னூப் டாக் (Snoop Dogg) மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (Red Hot Chili Peppers) கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு, தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படம்.

வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.

20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.

இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.

  • பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் பெற்ற 2 வெண்கலங்கள்
  • ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசாலே பெற்ற 1 வெண்கலம்
  • ஆண்கள் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெண்கலம்
  • ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பெற்ற வெள்ளிப் பதக்கம்
  • ஆண்களுக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் பெற்ற வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020இல், இந்தியா ஏழு பதக்கங்களுடன் (அதில் ஒன்று தங்கம்) பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டுக்கு, இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 100 கிராம் எடை அதிகரித்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

Share This Article
Leave a review