தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் கடந்த இரண்டு மாதமாக மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் வழியாக போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தது.
இந்நிலையில் இந்த காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் கிருஷ்ணகிரியில் ஒருவரும் ஆந்திர மாநிலத்தில் இருவரும் என மொத்தம் இதுவரை 6 பேரைக் கொன்று திருப்பத்தூர் மாவட்ட இரண்டு இளைஞர்களை தூக்கி வீசியதில் பலத்த படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கும்கி யானைகளை வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கிற கும்கியும், முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என 2 கும்கி யானைகள் என மொத்தம் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த யானைகள் ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் ஆந்திரா மாநிலம் வனப்பகுதி ஒட்டி உள்ள மல்லானூர் பகுதிக்கு சென்ற இரண்டு யானைகள் அங்கு உஷா மற்றும் சிவலிங்கம் ஆகியோரை மிதித்து கொன்றது அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆந்திர அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
பின்னர் ஆந்திராவில் இருந்து விரட்டப்பட்ட இரண்டு யானைகள் தற்போது தமிழக எல்லையில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆத்தூர் குப்பம் தகரகுப்பம், கரடி குட்டை, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சுற்றி வருகிறது.
இதை தமிழக வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர் சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யானை விரட்டும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆனைமலை காப்பகத்தின் மருத்துவக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒரு யானைபிடிபட்டது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடிபட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.