புதுச்சேரி பூமியான்பேட்டை, ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்பிரசாத் (40). இவரது மனைவி ஜெயதி பிரசாத் (37). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். விவேக்பிரசாத் கட்டடம் கட்டும் ஒப்பந்தப்பணி தொழிலை மேற்கொண்டு வந்தார். அவரிடம் சூபர்வைசராகவும், ஓட்டுநராகவும் புதுச்சேரி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த பாபு என்ற ஷேக்பீர்முகம்மது (40) இருந்தார்.
இந்நிலையில், அவருக்கும் விவேக் பிரசாத் மனைவி ஜெயதி பிரசாத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ள காதலால் பாபுவும், ஜெயதி பிரசாத்தும், கணவரைக் கொல்லத் திட்டமிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரி அருகேயுள்ள பூத்துறை பகுதியில் கட்டடப்பணியை பார்க்கச் சென்ற விவேக்பிரசாத்தை உடன் சென்ற பாபு என்கிற ஷேக்பீர் முகம்மது கத்தியால் வெட்டிக் கொன்று, அங்குள்ள பள்ளத்தில்புதைத்துவிட்டார்.
ஆனால், மறுநாள் கணவரைக் காணவில்லை என ஜெயதி பிரசாத் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகார் அடிப்படையில் அப்போதைய ரெட்டியார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமணி விசாரித்தபோது, விவேக்பிரசாத் கொல்லப்பட்டதும், அதற்கு அவரது மனைவியே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதனையடுத்து பாபு என்ற ஷேக்பீர் முகமது, ஜெயதிபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாபு என்ற ஷேக்பீர் முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதைக் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை விதித்து நீதிபதி செந்தில்நாதன் உத்தரவிட்டார். மேலும், ஜெயதிபிரசாத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும், அதைக் கட்டத்தவறினால் 6 மாதம் தண்டனையும் அளித்து உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.