2.80 கோடி கொள்ளை , போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை , வழக்கில் திடீர் திருப்பம்..

2 Min Read

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான ரூபாய் 2.80 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் தொழில் பங்குதாரர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி நகரில் சொந்தமான வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டி பாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். அதன்படி முன்பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ. 2.80 கோடியை ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார்.

நேற்று மதியம் சுதர்சன் மீண்டும் புதிதாக வாங்க இருக்கும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 4 பேக்குகளில் இருந்த ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோபி செட்டிபாளையம் போலீசார் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர்.
தனிப்படை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருட்டு நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவை செயல்படாதது என்று தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பணத்தை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வளவு பணம் வீட்டில் வைத்து இருக்கும் தகவல் சுதர்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே அவர்கள் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.‌

Share This Article
Leave a review