கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி என்னும் பேரலை உருவாகி பல லட்சம் மக்களின் உயிர்களை காவு வாங்கியது. வங்கக் கடலோரம் வசித்த மக்களும் கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.உலகெங்கிலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சுனாமி.கடலோர மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.உயிர் சேதம் பொருள் சேதம் என மக்கள் பெரும் துயருக்குள்ளானார்கள்.

சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 19-வது ஆண்டு நினைவு தினமானஇன்று கடற்கரை கிராமங்களில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் அதிகாலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன. சென்னை, புதுச்சேரி,கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பல ஆயிரம் பேர் கடல்அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் சுனாமியால் 1,017 பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி 19 ஆண்டுகளைக் கடந்த பின்பும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகம் ஒருபுறமிருக்க, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமடையாத நிலையிலேயே இன்றும் அவர்கள் உள்ளனர். இயற்கை சீற்றங்களில் இருந்துமீனவர்களை காக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கன்னியாகுமரி யில் ஹெலிகாப்டர் மீட்பு மையம்அமைக்க வேண்டும் என அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமங்களில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை (அரசு கணக்கெடுப்பின்படி) 6,065 பேர். இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231 பேர். மற்றவர்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.