கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18- பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி விழுப்புரம் மருத்துவமனைகளில்
45 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுவோரில் எவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழக்கவில்லை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்தார். என்ற போதிலும் மதியம் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மது அருந்தியவர்கள் அதிக வயிற்றுப்போக்கு கை கால் மரத்து போதல் நிலை ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர தொடங்கினர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தெரிவித்தனர் .இதை அடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

கள்ளச்சாராயம் விற்பனை
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி மருத்துவ மனையில் 19 -பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மணி(58), கிருஷ்ணமூர்த்தி(62), .இந்திரா(48). ஆகிய மூன்று பேர் இறந்துள்ளனர். விழுப்புரத்தில் அரசு மருத்துவமனையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அதில் 7 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 47 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் பலர் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் என்பவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் நேற்று முன் தினம் பிற்பகல் முதல் நேற்று அதிகாலை வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், பிற்பகல் அருந்தியவர்கள் இரவு பாதிப்புக்குள்ளாகியவர்கள் தான் நேற்று பிற்பகல் உயிரிழந்ததாகவும், நேற்று அதிகாலை வரை அருந்திய பலர் பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார்,
சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெறுகிறது. தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல.அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக அழிக்கவேண்டும். என்று கூறினார்.