- டானா புயல் காரணமாக ஒடிசாவில் வெள்ளம் பாதிக்க வாய்ப்பு இருக்கும் பகுதிகளிலிருந்து சுமார் 6 லட்சம் மக்கள் முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதில் மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பெண்களில் சுமார் 1,600 பேர் பிரசவித்துள்ளனர் என ஒடிசா முதல்வர் கூறியுள்ளார்.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்றது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் கூட, ஒடிசாவுக்கும், மேற்குவங்கத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, புயல் கொஞ்சம் கொஞ்சமாக ஒடிசாவை நோக்கி நகர்ந்து, ஒரு கட்டத்தில் தீவிர புயலாக வலுப்பெற்றது. எனவே ஒடிசாவுக்கு உட்சபட்ச அலர்ட் விடுக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படை சேர்ந்தவர்கள் உடனடியாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர். மொத்தமாக 8-10 லட்சம் மக்கள் வரை அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று கணக்கிடப்பட்டது.
இதில் 6 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு 6,008 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதிகபட்சமாக பலசோர் மாவட்டத்திலிருந்து 1,72,916 பேரும், மயூர்பஞ்ச் மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேரும் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 6 லட்சம் பேரில், 4,431 கர்ப்பிணிகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதில் சுமார் 1,600 பெண்கள் டானா புயல் கரையை கடந்த தினத்தில் பிரசவித்துள்ளனர் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “6,0008 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவும், குடிநீரும், அடிப்படை மருத்துவ வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. அனைவரும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள். நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்திருக்கிறார். அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 4431 கர்ப்பிணிகளில், 1600 பேர் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். குழந்தைகளும், தாயும் நலமாக இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://www.thenewscollect.com/former-minister-ponnaiyan-interviewed-that-there-will-be-a-situation-where-dmk-government-can-merge-with-admk/
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜக அதிக வாக்குகள் பெற்று, 25 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் டானா புயலை இந்த அரசு எப்படி கையாளப்போகிறது? என்கிற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தனது செயல்கள் மூலம் பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.