ஒரு பக்கம் ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு எதிப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தடை செய்யப்பட்ட இரண்டு நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை தஞ்சை அருளானந்த நகரில் அமோகமாக நடந்து வருகிறது. காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநில லாட்டரி, சுரண்டல் லாட்டரி ஆன்லைன் லாட்டரி என அனைத்து லாட்டரி விற்பனைகளும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சை அருளானந்த நகரில் வெகு சிறப்பாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இங்கு லாண்டரி கடை என்ற பெயரில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. எந்த நேரமும் இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும். லாண்டரியில் சலவைக்கு துணி போடதான் இவ்ளோ பேர் நிற்கிறார்கள் என நினைத்து அருகில் சென்று பார்த்தால் ஒரு மஞ்சள் கலர் துண்டு சீட்டில் நம்பர் எழுதி கொடுக்கிறார்கள்.

இரண்டு நம்பர் லாட்டரி என்கிறார்கள் உதாரணத்திற்கு 12.45.60. என இரண்டு இலக்கமாக எழுதி தர வேண்டும். குறைந்தபட்சம் 10 சீட்டுகள் வாங்கவேண்டும். ஒரு சீட்டு 15 ரூபாய் 10 சீட்டுக்கு 150 ரூபாய். இரண்டு நம்பர், மூன்று நம்பர் என தனிதனியாக விற்பணை செய்கின்றனர். பணம் லாண்டரி கடையில் வாங்கி கொள்கிறார்கள். ரிசல்ட் கேரளா லாட்டரிஸ் என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என அனுப்பி வைக்கின்றனர். கேரளா அசாம் என அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இணையதள லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தஞ்சை அருளானந்த நகரில் பகிரங்கமாக நடந்து வருகிறது காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பல குடும்பங்கள் சீறழிந்து வந்துள்ளது. மீதமிருக்கும் குடும்பங்களையாவது தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் மகளிர்.