- சீல் வைக்கப்பட்ட பிறகும் கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் 14 செங்கற்சூளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட வனப்பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவது தொடர்பாகவும், செம்மண் கொள்ளை தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 14 செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
செங்கற்சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுரங்கத்துறை உதவி இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலந்துறை, தேவராஜபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கரடிமடை கிராமங்களில் செம்மண் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 25ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவரும், கனிம வளத்துறை உதவி இயக்குனரும் நேரில் ஆய்வு செய்த பிறகும் செம்மண் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமாக செங்கற்சூளைகள் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்த பிறகும், நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்படும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும் உதவி இயக்குனர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஒவ்வொரு துறை மீதும் குறை கூறி வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக 14 செங்கற்சூளைகள் செயல்படும் பகுதிகளிலும், செம்மண் கொள்ளை நடக்கும் பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் நாராயணனுக்கு உத்தரவிட்டனர். மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர், கனிம வளத்துறை உதவி இயக்குனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.