நூதன முறையில் பைக் திருடிய பலே திருடனான 108 ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்து 21 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.விக்கிரவாண்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பைக்குகளை திருடிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நோயாளியின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ் ஞானக்குமார் ஏட்டுக்கள் தேவநாதன் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பஸ் நிலையம் அருகே எஸ்ஐ காத்தமுத்து மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மருத்துவக் கல்லூரி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தபோது அந்த வாலிபர் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கி பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.அவரது பதில் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் பல தகவல்கள் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் இந்திரா சதுக்கம் பகுதியை சேர்ந்த மணி மகன் சுரேஷ் (32) என்பதும் 7 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணி செய்து தற்பொழுது 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணி செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணி செய்து ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வராதபடி அங்கிருந்த பைக்குகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டான்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு நோயாளிகளை பார்க்கவரும் உறவினர்களின் வாகனங்களை லாவகமாக திருடி மறைத்து வைத்து பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு சென்று விற்பதே இவரது வேலை.பலர் கொடுத்த புகாரின் பேரில் இவரை தொடர்ந்து கண்கானித்து வந்த போலீசார் இவரை பிடித்துள்ளனர். இதனையடுத்து அவன் மீது வழக்கு பதிந்து கைது செய்து 21 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.