மத்தியபிரதேச மாநிலம் , துலே அருகே ஓடும் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதிய பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் துலே நகரை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது . செவ்வாய்கிழமை காலை 10.45 மணியளவில் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் துலேயில் உள்ள பாலஸ்னர் கிராமம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது .
அப்போது, திடீரென லாரியின் பிரேக் பழுதாகியதாக கூறப்படுகிறது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த அந்த கண்டெய்னர் லாரி, அவ்வழியாகச் சென்ற கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.
இதில் வாகனங்கள் நசுங்கின. ஆனால், லாரியின் வேகம் குறையவில்லை. மேலும், ரோட்டோர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் மாணவர்கள் மீது லாரி மோதியதுடன், அங்கிருந்த உணவகத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் வாகனங்களில் சென்றவர்கள், பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள், ஓட்டலில் இருந்தவர்கள் என 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ஷிர்பூர் மற்றும் துலேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புல்தானா பகுதியில் பேருந்து தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில் , தற்போது 10 பேர் லாரி மோதியதில் உயிரிழந்துள்ள சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .